×

ஊட்டி தாவரவியல் பூங்கா!

ஊட்டி தாவரவியல் பூங்கா நீலகிரி மாவட்டத்திலுள்ள மலை வாசஸ்தலமான உதகமண்டலத்தில் அமைந்துள்ளது. 1848 ஆம் ஆண்டு கிரஹாம் மக்கில்வேர் என்ற கட்டடக்கலை வல்லுநரால் தொடங்கப்பட்டது. இவருக்கு 1840 ம் ஆண்டிலேயே தாவரவியல் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கான விதையை திவிதேல் என்பவர் விதைத்தார். ஐரோப்பிய மக்களுக்காக 3 ரூபாய் சந்தாவில் மாதம் முழுவதும் காய்கறி கொடுக்க அப்போதைய ஐரோப்பியர்கள் முடிவு செய்தனர். அப்போது கணிசமான அளவு காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஐரோப்பிய 2வது படையை சேர்ந்த மொலினெக்சு என்பவரே இப்பகுதியை நிர்வகித்துவந்தார். கொஞ்ச நாட்கள் காய்கறிகள் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது. ஆனால் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1848ல் மக்கில்வோர்தான் இத்தோட்டத்தைச் செம்மைப்படுத்தினார். இதற்கு 10 ஆண்டுகள் பிடித்தன. 55 ஏக்கரில் பரந்து விரிந்த இப்பூங்காவில் 650க்கும் மேற்பட்ட தாவரங்கள் தமிழக அரசு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊட்டி மலையில் உள்ள பூங்கா கீழ்த்தளத் தோட்டம், மேல்தள நீரூற்று, இத்தாலியன் தோட்டம், கண்ணாடி வீடு உட்பட 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்கின்றது.

கீழ்த் தோட்டத்தில் பச்சைப்பசேல் என்று புல்வெளி காட்சியளிக்கிறது. 127 வகையான செடிகள் இங்கு இடது பக்கத்தில் ராஜ்பவன் செல்லும் வழியில் அமைந்துள்ளன. இந்திய நாட்டின் வரைபடத்தை குறிக்கும் வகையில் பல தாவரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள காட்சி பிரசித்திபெற்றது.புதிய தோட்டம் என்பது சமீபகாலத்தில் தான் உருவாக்கப்பட்டது. இங்கு பிறை வடிவக் குளம் ஒன்றுள்ளது. ஹை ப்ரீட் டீ ரோஸ் என்ற ரோஜா செடிகள் 300 வகையானவையும், உயர்ந்த ப்லோரிபண்டா மற்றும் போலியன்தாஸ் போன்ற செடிகளும் அமைந்துள்ளன. இத்தாலியன் தோட்டம் என்ற பகுதி முதல் உலக போரில் பிடிபட்ட இத்தாலிய கைதிகளால் உருவாக்கப்பட்டது. இவர்கள் உதகமண்டலத்தில் ராணுவக்கட்டுப்பாட்டில் இருந்தவர்கள். உடுவுரு மலர், ஆப்பக்கொடி, சூரிய காந்தி இன செடி மற்றும் சால்வியா, டெல்ஃபினியம் என்ற ஒரு வகை தோட்ட செடி, டாக்லியா போன்ற பூக்களும் இந்த தோட்டத்தில் காணப்படுகின்றன.

கண்ணாடி வீடு என்பது 1912ம் ஆண்டில் செடிகொடிகளை வளர்க்கும் வீடாக கட்டப்பட்டது. இங்கு ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களைத் தொகுக்கும் நோக்கத்துடன் பொதுப் பூங்கா கட்டப்பட்டது. சினேரியா , ஸ்கிசாந்தஸ் , கால்சியோலாரியா , பால்சம், சைக்லேமன், க்ளோக்சினியா , ட்யூபரஸ் பிகோனியா, கோலியஸ், ஜெரனியம், கிரிஸான்தமம், ப்ரிமுலாஸ், டைடியா, அகெமீன்ஸ் போன்ற வண்ணமயமான பூச்செடிகள் இடம் பெற்றுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி மகிழ்ச்சி தருவது இயற்கை எழில் கொஞ்சும் பசுமை போர்த்திய மலைப்பகுதிகள். பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல பொது அறிவு மேம்படவும் இதுபோன்ற இடங்களுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள்.

The post ஊட்டி தாவரவியல் பூங்கா! appeared first on Dinakaran.

Tags : Feeder Botanical Park ,Oothi Botanical Park ,Nilgiri district ,Graham Muckyware ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...